Monday, 26 August 2013

நீயும் இவர்களில் ஒருவனா?

கீபோர்ட், கிட்டார் எனக்கு அத்துபடி
கிரிக்கெட்- நான்தான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்
ஈவ்னிங் ஆனா ஜிம், நண்பர்களோடு அரட்டை
கூலிங் கிளாஸ் போட்டு ஸ்டைலா வண்டிய எடுத்தா
ச்சும்மா ஸ்பீடா பறக்கும்ல...
நல்லவேலை, கை நிறைய சம்பளம்.
கம்ப்யூட்டர்லயும் புகுந்து விளையாடுவேன்
கஸ்டமான கணக்குகள்கூட ஈஸியா போடுவேன்

ஆனாலும்
டிரிங்ஸ் எடுக்காம இருக்க முடியல
சிகரெட், பாக்கு மறக்க முடியல
கண்ட கண்ட பாடம் பாக்குறத நிறுத்த முடியல
வீட்டுக்கு வந்த விருந்தாளியிடம் பேசத் தெரியல
பொண்ணுககூட சாதாரணமா பழகத் தெரியல
கண்ணுக்கு அழகானவள பாத்துட்டாவே
காதல் கல்யாணம்னு மனம் அலைபாய்து. 
நான் விரும்புறவ என்ன மட்டும்தான் விரும்பனும்
விலகிப் போயிட்டா வெறிபுடுச்ச நாயாகிடுறேன்.
வக்கிர எண்ணங்களும் வன்முறை செயல்களும்
என் மனசு பூரா நிரம்பியிருக்கு.
அம்மா அப்பாட்ட ஆசையா பேசுனதுல்ல
சம்பளத்துல பத்துப் பைசா கொடுத்ததில்லை
காதலிச்ச அஞ்சு மாசத்துல
அவளுக்காக எவ்ள செலவு பண்ணேன்னு தெரியல.
கையேந்துறவங்களப் பாத்தா அருவருப்பா இருக்கு
கஸ்டப்படுறவங்களப் பாத்தா கலாய்க்கத்தான் தெரியுது.

நீயும் இவர்களில் ஒருவனா?
என்ன படித்து என்ன புண்ணியம்?
உன்னையே நீ அறிவாய்.



Sunday, 11 August 2013

எரியும் பனிப்போர்

ஐ.ஏ.எஸ் படித்திருக்கலாம்
அதனால் என்ன?
ஒரு அஞ்சாங்கிளாஸ் எம்.எல்.ஏ
அலேக்காகத்தூக்கி வீசலாம்.
ஐந்து வருட 'பவர்' அது.

கொள்ளையை மட்டுமே 
கொள்கையாய் வகுத்து
எல்லையில்லா சுதந்திரம் பெற்று
மளமளவென  சொத்து சேர்த்து
மல்லையா வாரிசுபோல
மல்லாக்காப் படுத்துக்கிடக்கும்
வெள்ளைப் பேய்கள் இவை.
ஞாபகமிருக்கிறதா?
ஐந்தாண்டுகளுக்கு முன்
அம்மா! தாயே! என 
திருவோடும் இல்லாமல்
தெருத்தெருவாய்ச் சுற்றிய
இராப்பிச்சைக்காரர்கள்.

பணம் பதவி வந்தபின்
பாமரரை நினைத்துப்பார்க்க முடியுமா?
அவர்களுக்கு எங்கே நேரமிருக்கிறது?
இருக்கும் நேரத்தில் என்ன செய்கிறார்கள் என
தகவல் அறியும் சட்டம் உதவுமா?
சட்டம் வரைந்தவன் எப்போதும்
சட்டத்திற்கு வெளியேதான்.
safety first.

நேர்மையான அதிகாரிக்கு 
நேரும் கொடுமை நாடறியும்.
வாலாட்டுங்கள்
விசுவாசப் பிராணிகளாக அல்ல.
'துர்கா' போன்று விஸ்வரூபமெடுக்க
துணிந்து வாலாட்டுங்கள்.
வெட்டப்பட்டால் வால்தானே போகிறது.





Tuesday, 6 August 2013

விலக்கப்பட்ட கனிகள்



'நான் நம்புகிறேன் ஆண்டவரே
நீர் மெசியா, இறைமகன்'
பேதுரு மட்டுமல்ல
மார்த்தாவும் சொல்லியிருந்தாள்.
முன்னவர் உயர்த்தப்பட்டார்
பின்னவர் மறைக்கப்பட்டார்.

உயிர்ப்பின் முதல் தரிசனம் பெற்று
'நான் ஆண்டவரைக் கண்டேன்'
என்ற மகதலா மரியா
அதன்பிறகு காணாமலே போய்விட்டாள்.

கிறித்தவத்தின் முதுகெலும்பான
யூத மதமும் கிரேக்க அறிவும்
பெண்ணைப் போற்றியதில்லை.
'அவளுக்கு ஆன்மா இல்லை
அதனால் மீட்பும் இல்லை' என்ற
அகுஸ்தினாரும் அக்குவினாசும்
இறையியலின் இருபெரும் தூண்கள்.
'மனித இனம் பாவத்தில் விழவும் - இயேசு
மானிடமகனாய்ப் பிறந்து இறக்கவும்
காரணமே அவள்தான்' என வாதிட்ட
ஆதித்தந்தையர்களின் கருத்துக்களால் கட்டப்பட்ட
திருச்சபை இது.
கவனமாய்ப் பொறுக்கி எடுக்கப்பட்ட
இறைவார்த்தைகள் வேறு.
சமத்துவம் பேசும் இறைவார்த்தைகள்
சரித்திரத்தைப் பார்த்ததில்லை. 
பாவம்! முடங்கியே கிடக்கின்றன.
அறியாமை கண்டு 
இறைமகன் சிரிக்கிறானா? அழுகிறானா?
குழப்பமே மிச்சம்.

'திரு'ச்சபை
கவனமாய் செதுக்கப்பட்ட பெயரிது.

Monday, 5 August 2013

வளமையும் வறுமையும்

'வாழை இலை' உணவகம்
வழக்கமான ஐட்டங்கள் விடுத்து
வித்தியாசமானதை விருந்தாக்கினோம்
நானும் என் நண்பரும்.
தேவைக்குமேல் மேசை நிரம்பியிருந்தது.

விலக்கிவிட முடியாத வறுமையோடு 
அம்மாவும் பதினைந்து வயதுப் பையனும்
பின்மேசையில் வந்து அமர்ந்தனர்.
உணவுப்பட்டியல் அழகாயிருப்பினும்
விலைப்பட்டியல் உதடுளை அந்நியப்படுத்தியது.
'நீ மட்டும் சாப்புடுடா தங்கம்
எனக்குப் பசிக்கல'
வழக்கம்போலவே மறைக்கப்பட்டது பசி.
நாற்பது ரூபாய் நூடுல்ஸ் கப்பில்
இருவரின் மனமும் அமைதியானது.

இருவேறு இந்தியா
இடைவெளி எப்போது  குறையும்?