Thursday, 31 January 2013

கனிவான கவனத்திற்கு...


நான்கு கவுண்ட்டர்களில் மூன்று மூடிக்கிடக்க
விட்டுக்கொடுக்க மனமில்லாது
மானை விழுங்கிய மலைப்பாம்பாய்
நகர்ந்து கொண்டிருந்தது பயணிகள்வரிசை.
எந்த வண்டி எந்த தடம்
பதிலளிக்க ஆளில்லை.
வந்த வியாபாரியிடம் வாய்ப்பேச்சு கொடுத்தபின்
வாங்கிக்கொண்டேன் பதில்களை.

வழக்கம்போல் தாமதமாக வந்த 
எக்ஸ்ப்ரஸ் ரயிலில் 
விழுந்து ஏறும் ஜனங்களில் நானும்.
எனது இடம் எதுவெனத் தேடி
கழிவுகளில் கால்படாது கடந்து செல்கிறேன்.
எட்டியிருந்த கழிவறையின் வாசம்
ஏகமும் நுழைந்திருந்தது.
வாடை வந்ததாலோ என்னவோ
வா'வென இழுத்தது.
தொடுவதற்குப் பயப்படும் தொழுநோயாளியாக
கதவினை கவனமாய்த் திறந்தேன்.
விரச வசனங்களும்
ஆண்டுகள் கடந்த மலக்கழிவும்
அறையை அவமானப்படுத்தின.
வழக்கமான
'அப்பாடா' அனுபவம் இல்லை.

வியாபாரத்திற்காகவும் யாசிக்கவும்
வெவேறு பாணியில்
வித்தியாசமான மனிதர்கள்
பயணம் முழுக்க படர்ந்திருந்தனர்.
அருகில் அறுபதுகள் இருக்க
வெளியே வேடிக்கை பார்த்தேன்.
ஆளில்லா பகுதிகள் எங்கும் அழகு
குடியேற்றப்பகுதிகள் எங்கும் குப்பை.
ஊதிய உயர்வு, பணி அமர்வு
ஆர்ப்பாட்ட போஸ்டர்களால்
அலங்கோலப்பட்டுக்கிடக்கும்
இரயில்வே சுவர்களைப் பார்க்கும்போதெல்லாம்
இருப்பவர்கள் சிறப்பான பணிசெய்ய
யார் போராட்டம் செய்வார்?
மனம் வலித்தது.
இறங்கும் நிலையத்தில்
இருக்கைவிட்டு எழுந்தவுடன்
இடம்பிடித்தவர்களில் 
எதிர்பால் இளசுகள்தேடி
கண்கள் சென்றதைத் தடுக்கவில்லை.

வல்லரசு இந்தியாவின்
இரயில் செல்லும் பாதைகள் எல்லாம்
நாறிப்போய்க் கிடந்தன.
மஞ்சள் நிறம் அப்போது 
மங்கலமாகத் தெரியவில்லை.

இரயில்வேயின் கனிவான கவனத்திற்கு...



Tuesday, 22 January 2013

கொட்டிக்கொண்டிருக்கும் பால்...




பாலியல் குற்றங்கள்- யார் காரணம்?
காரசாரமான வாதங்கள்
குற்றவாளிதான், சட்டங்கள்தான்.
பெண்களின் ஆடைகள்தான்
சில அறிவுக்கொழுந்துகள்.
மேற்கத்திய கலாச்சாரம்தான்,
ஆராய்ச்சியின் முடிவில் 
அரைவேக்காட்டுக்காவிகள்.

மானுடத்தின் சரிபாதி நீ - உரிமை
மறுக்கப்பட்ட – பார்வையில் 
மறைக்கப்பட்ட மறுபாதி நீ.
திமிறி எழுந்து உரிமை கேள்.
அடங்கிக்கிடந்தால் முடக்கிவிடுவர் - உன்
முனகல் சத்தம்கூட வெளியே கேட்காது.


பிரித்துப்பார்த்தே பழக்கப்பட்டவர்கள் நாம்.
நா ஆம்பள, நீ பொம்பள.
உடை, உறவு, மது, புகை...
கட்டுப்பாடுகள் உனக்கு மட்டுமே.
நமக்கிடையே சொர்க்க நரக இடைவெளி.

மடத்தனம் நம் மனம் முழுதும்
நிரம்பி வழிகிறது.

தன் தங்கையைத் தொட்டால்கூட
கொலைவெறி கொள்ளும் இவனுக்கு
மற்றவள் எல்லாம் தொட்டுக்கொள்ளத்தான்.
கிள்ளுக்கீரையாகிப்போனது உன் குற்றமல்ல
கலாச்சாரக் கொடுமை.

அடக்கி வைப்பதும் – வீட்டிலே
அடைத்து வைப்பதும்
ஆணின் பயத்தாலும் பலவீனத்தாலும்தான்.
கேட்டால் பாதுகாப்பென்பான்.
கல்பனா சாவ்லாவைக் கொண்டாடும் இவன் தன்
பதின்வயது மகளைப் 
பக்கத்து வீட்டிற்குக்கூட
அனுப்ப மாட்டான்.
சானியாவையும் சாய்னாவையும் 
சாதனையாளரென்பான்,
சாயுங்காலம் விளையாட
சத்தநேரம் தரமாட்டான்.
சாமியாகப் பார்க்கும் இவனின் கண்களில்
சமமாகப் பார்க்கும் பார்வையில்லை.

கேவலமான காமப்பார்வைக்குக் 
கடவுள்கூட தப்புவதில்லை.

போலி மனசாட்சியில் 
நாறிக்கிடக்கிறது நம் இந்தியா.
தூர்வார வந்தவர்களையெல்லாம் துரத்திவிட்டு
துக்கம் கொண்டாடும் துர்பாக்கியர்கள் நாம்.

தெய்வமாக்கினது போதும்.
ஆண்பெண் வித்தியாசம் களை.
மகளையும் மனிதனாக நினைத்து
வாய்ப்புக் கொடுத்து வளர்த்துப் பார்.
முட்டிமோதி முக்தியடைவாள் - தீயன
எட்டி மிதித்து சக்தி பெறுவாள்.
ஆணைவிட அவளே பலசாலி.

Friday, 18 January 2013

யார் நீ?


தொழுவம், தொட்டி, வயல், தொட்டி, தொழுவம்.
வீடு, பேருந்து ,பணியிடம், பேருந்து, வீடு.

மாட்டுக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் பெரிதில்லை
செக்குமாடாய் செத்தவாழ்வு வாழ்வது முடிவில்லை
சிந்தனையைச் சீர்படுத்து.

வாழ்க்கையை வாழாதவன் 
கல்லறையில் மட்டுமே இருக்க வேண்டும்.

Monday, 14 January 2013

கடவுள் கொண்டாடிய பொங்கல்


களிமண்ணைப் பிசைந்து வைத்து
சக்கரத்தில் சுழற்றிவிட
உருகொடுத்து உயிர் கொடுத்தான் 
உழைப்பாளி, ஓர் உன்னத படைப்பாளி
மனிதன் ரெடி, பானையும் ரெடி.

புதுவாழ்வு தந்திட புத்துலகம் படைத்திட்டபின்
அழகான தோட்டம் அமைத்து
அருஞ்சுவை கனிகள் நிறைத்து
அரிசியை உணவாகத் தந்தான்.

ஒளியின்றி உயிரில்லை
உயிரளிக்கும் நானே உலகின் ஒளி என
படைத்தவன் பாடி வைக்க
பானையிலிடப்பட்ட அரிசி
பக்குவமாய் பதத்துக்கு வந்தது
ஒளி கொடுத்த பின்.

மனிதன் தனியே இருப்பது நல்லதன்று
மசாலா தேவைப்பட்டது
சர்க்கரையாய் உப்பாய்
பல்சுவை அனுபவங்களால் பக்குவப்பட வைத்தான்.

சுகமாக இருக்கும்வரை
பலனுள்ள வாழ்வு இல்லை
பயனுள்ள வாழ்க்கை வாழ
முயன்று நீயும் முட்டிப்பார்
தோட்டம் விட்டு வெளியே வா
மாற்றம் நீயும் கொண்டு வா.
பதத்துக்கு வந்த அரிசி
பானையைத்தாண்டி பொங்கி வழிந்து
பார்ப்போரை பரவசப்படுத்தியது.


தடைகள் தாண்டி அறுவடையில்

ஆண்டவனை நினைக்கும் உழவன்போல்
மடைவெள்ளம் போன்ற அருளுக்காய் 
மகிழ்வோடு நன்றி சொல்வோம்.