Friday, 21 September 2012

என்னதான் நடக்கிறது?




நடக்கும் விஷயங்கள் புதிதில்லை- ஆனாலும் 
கேட்கத்தோன்றுகிறது, என்னதான் நடக்கிறது?
உசிலம்பட்டி கண்ணாயிரம் முதல்
உச்ச நீதிமன்ற நீதிபதி கபாடியா வரை
கேட்ட கேள்வி இது

தீவிரவாதிகள் எல்லாம் விருந்தாளி - 
லட்சம் கோடி ஊழலானாலும் மந்திரி 
பாவம், ஆடு திருடிய ஐயாச்சாமி 
சிறையில் அடிபட்டு மரணம் என்கையிலும் 

உட்கார்ந்து படிக்க அறை இல்லை - ஒளிந்து 
ஒன்னுக்கு போகவும் வழியில்லை
கதவு திறந்திருந்தும், கல்விக் கண்திறப்பவன் இல்லை
"விரைவில் அனைவருக்கும் லேப்டாப்" என்கையிலும்

அரிசி விளைச்சல் கொஞ்சமில்லை
கோதுமை ஏற்றுமதிக்கு பஞ்சமில்லை - ஓசிக் 
கஞ்சிக்கு ஓடும் ஏழைக்கூட்டம் 
கிடங்குகளில் எல்லாம் எலிக்கூட்டம் - என்கையிலும்

கேட்கத் தோன்றுகிறது என்னதான் நடக்கிறது?
சிந்தனை மாற்றம் நல்லது - அனால்
சிந்தனையே மாறிப்போனது


ஏழை மேல் கருணை இல்லை
கருணைக் கடவுள் பற்றி மட்டும் நினைப்பு 
உண்டியலில் கொட்டிவிட்டால் நேரே மோட்சமோ? 

நினைப்பதில் பிறர்நலம் இல்லை
பிறர் பற்றி நல்லதை நினைப்பதில்லை
தான் உண்டு தன் வேலை உண்டென 
உண்டு கொழுத்தவன் உறக்கமில்லாமல் 
விடியும் பொழுதில் வீதியிலே 
எடை குறைக்க நடை பழகுவதைப் பார்க்கும் போதும் 
கேட்கத் தோன்றுகிறது 
அடக்கடவுளே என்னதான் நடக்கிறது?





Saturday, 15 September 2012

கவலையில்லை இனி.

விண்ணகத் தந்தையின் எண்ணிலா வரமுடன்
மண்ணகம் பிறந்த கன்னி மாமரியே
அன்பின் நிறைவாய் அழகின் உருவாய்
மன்னன் இயேசுவை மடியில் தாங்கினீர்

 நரைமுடி நல்
லோன் சிமியோன் தாமே
"கண்கள் மீட்பைக் கண்டன" என்று
மங்கள வார்த்தையால் மனதார வாழ்த்தினும்
"உமதுள்ளம் வாளால் ஊடுரு வுமென"
மனுக்குல மீட்பின் மரியே நின்
அனுதின துயரம் அன்றே சொன்னான்.


திருவிழா எல்லாம் ஒரு வழியாக
சடங்குகள் பலிகள் சரியாக முடித்துத்
திரும்பிடும் நேரம் "குழந்தையைக் காணோம்."
விரைந்திட்ட  உம்முன் உரைத்திட்ட உண்மை
"தந்தையின் பணியில் தமையன் இருப்பது
தாமறியாதோ" எனும்போது தவித்திருப்பீர்.

திருமனந் தன்னில் திருமகன் தன்னை
இறைமகனென இவ்வுலகம் எண்ண
பிறரன்புப் பணியில் பரிவுடன் இணைத்து
"அவர் சொல்வதெல்லாம் செய்யுமென"
அங்குள்ளோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி
புதுமை பிறந்திட மகிமை விளங்கிட வழி செய்தீர்.

அருஞ்செயல்கள் பல அன்போடு செய்தும்
பெருங்கூட்டம் அவரை விடாது நின்றும்
கடுஞ்சொல் பொறாத கபடதாரிகள்
பெத்தமகன் இன்று பித்தனானான் என
சுற்றி இருந்தோரை சூடேற்றி விட
என்னமோ ஏதோவென பதறியிருப்பீர்.

உன் வருகை பற்றி உன்னருமை மகன்
"என் தாய் யாரோ என் தங்கை யாரோ
விண் வாழும் தந்தை விருப்பம் செய்வோரென"
கூடியிருந்தோரையும் குடும்பத்தார் ஆக்கியதால்
"உம் தாய் வயிறும் பால் தந்த கொங்கையும்
கொடுத்து வைத்தவை" என்ற
னள் உம் புகழ் சாற்றி.

அதிகார வர்க்கம் சதி செய்த வினையில்
நொடிந்த உடலை நொறுக்கிய சிலுவையால்
சிறுமைப்பட்டு சிதைந்தவர் நீயும்தானே.
சிலுவையின் அடியில் இறைவனின் தாய்
இனி வருங்காலம் அனைவரின் தாயென்ற
இயேசுவின் மொழியால் கவலையில்லை இனி.