Thursday, 27 October 2011

விடியல் எப்போது?

விடிந்திருந்தும் விடியலுக்காய் காத்திருக்கிறேன்.


எங்கோ இருக்கும் எகிப்து
முப்பதாண்டுகால முபாரக் ஆட்சி 
முனகி முனகி மூர்சையாகிவிடவில்லை
முடிந்தவரை முட்டி பார்த்தனர் 
கிடைத்தது சுதந்திரம் - ஆனால்
முதல் உலக நாடுகளிடமிருந்து 
விடியல் எப்போது?

எட்டி விடும் தூரத்தில் இலங்கை 
எதிரி என்று எதிர்பட்ட இடங்களிலெல்லாம் 
கொல்லப்பட்டான் தமிழன் 
ஆரோக்கியமான ஆடவர் ஊனமுடன் சிறையில் 
ஐந்தும் பத்துமாக அழிந்தனர் தினமும்
பிணக்குவியலாயினர் பிஞ்சுகள் 
இருந்ததை எல்லாம் இழந்தனர் பெண்கள் 
என் கண்முன்னே ஒரு தேசம் நாசமானது
போர் முடிந்தது 
விடியல் எப்போது?



என் இந்தியா களவாடபடுகிறது 
கோடிகளைத் தின்ற கேடிகள் 
கேட்பாரற்று கேளிக்கையில் ஈடுபட- எதிர்த்து 
கேட்பவனை எல்லாம் கேவலமாக கொன்றனர்.
நல்லவனென்று நாட்டை கொடுத்தோம்
நசுக்கபடுவது நாம்தான் என யோசித்தோமா?
மக்களாட்சிதான் 
விடியல் எப்போது?


எதிர் வீட்டுக்காரன் என்பது பவுன் கேட்கிறான்
நான் ஐம்பது கேட்டால்
என் மானம் என்னாவது? என 
எள்ளளவும் நல் எண்ணமற்ற 
எண்ணற்ற எருமைகள் 
என் சகோதரிகளை கடைச்சரக்காக்கி
காசுக்கும் காமத்திற்குமாய் என்றாக்கிவிட்டனர் 
 விழித்திருக்கிறார்கள்  - ஆனால் விடியல் எப்போது?

விடிந்திருந்தும் விடியலுக்காய் காத்திருக்கிறேன்.





Tuesday, 18 October 2011

தமிழ் காக்க தயார்

ஆயிரமுண்டு இனங்கள், பல்லாயிரமுண்டு மொழிகள் 
ஆயினும்  ஏனோ தெரியவில்லை 
தமிழ்மொழிபோல் இனிதாவது 
தப்பிப் பிழைக்குமோ இனியாவது 

நாகரிக படிநிலைகள் ஐந்தென்பர் அறிஞர் 
இவ்வைந்தையும் இராயிரம் ஆண்டுகள் முன்னே 
எட்டிவிட்ட எழில் மொழியாம் நம் தமிழ் மொழி 
எந்த நாகரிகமும் எட்டாத சிறப்படா இது.
 
மனித சிந்தையில் சுயநலம் ஊற்றெடுக்குமுன்னே
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என 
எம் மனித குலத்திற்கே
 உலகக் கவிதை கண்டது தமிழே 
எப்படியோ இன்று அந்நிய மாயை அடிவரை பாய்ந்துவிட்டது.

ஆரியர், களப்பிரர், நாயக்கர், பல்லவர் என 
நல்லவரல்லாதோர் நாடாண்ட போதும் 
'யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் 
போரொடுங்கும் புகழ் ஒடுங்காது' என்று 
கம்பனின் எழுத்தாணி கக்கிய மொழியடா இது.

நாடு அடிமையாய் இருப்பினும் சொற்கள் சுதந்திர உலா வந்து 
பாரதியின் பாடலில் பாரதிதாசனின் படைப்பில் 
நெருப்பாய் கழன்று, விதையாய் விழுந்து 
விருட்சமானது செம்மொழியான தமிழ் மொழியே 

போதும் என மனம் சொல்கிறது - தமிழின் பழம்பெருமை பேசியே 
பொழுதை போக்கிவிட்டோம் 
ஆங்கில மொழியும் அறிவியல் உலகும் அரக்கபாம்பென 
மெல்ல மென்று வருகிறது
தலை தாழ்ந்த தமிழினத் தலைவர்களைத் தாங்கியது போதும். 
தலைசாயுமுன் தமிழை காக்கத் தயாரா?


Friday, 14 October 2011

திரைக்கு இரையாகும் இளைஞர்கள்


சில ஆயிரம் பேரை வாழ வைத்து 
பல லட்சம் பேரை அழித்து வரும் 
அன்யோன்யமான தீவிரவாதி - சினிமா 




கற்பனைகளில் கால் ஊன்றி பணக்கத்தைகளில் வேரூன்றி 
நிழலை நிஜமென காட்டுகிறான்.
பொய் எனத் தெரிந்தும் மெய்யை 
மெதுவாக மறந்து விடும் மனிதர்கள் நாம். 

கனவுலகில் மிதக்க
காசு கொடுத்து கொடுத்து 
கந்தலாகிப் போகிறது ரசிகனின் வாழ்க்கை.



சிவாஜி படத்தில் ரஜினியின் சம்பளம் 
15 கோடி - எவனுடைய பணம்?

கையை ஆட்டி வசனம் பேசி 
கடவுளை மிஞ்சும் அளவில் அதிசயம் செய்வார்

அண்ணா, அம்மா என கொஞ்சி பேசி 
அரசியலில் நுழைவார்.

"தலைவா"  "உயிரே" 
மாயையில் மாண்டு போகும்
 விட்டில் பூச்சிகள்
வெறி பிடித்த இளசுகள்.
கலையை கலையாக பார்த்தால்
சிலைவரை போகாதே நம் மனம்/இனம் .

முத்திரை குத்திவிட்டனர் 
சிந்திக்காதவரை தமிழன் இளிச்சவாயனே.