Thursday, 6 January 2022

பொங்கட்டும் புதுவாழ்வு



ச்சே…இதெல்லாம் ஒரு பொழப்பா சார்…இந்த வாழ்க்கைய வாழுறதுக்கு பேசாம எங்காவது போயிடலாம்.. நாய் பட்ட பாடாயிருக்கு…இந்த வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்பதுண்டு. நாம்கூட சொல்லியிருப்போம். 

அதிசயமான மனிதவாழ்வு

சமீபத்தில் ஒரு காணொளி பார்த்தேன். உலகில் 5 வினாடிகள் பிரானவாயு (ஆக்சிஜன்) இல்லை என்றால் என்ன ஆகும் என்பதுபற்றியதுதான் அந்த காணொளி. காற்றில் 21 சதவீதம் ஆக்சிஜன் மற்றும் 78 சதவீதம் நைட்ரஜன் இருக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்று. 5  வினாடிகள்தானே…மூச்சை அடக்கிக்கொண்டால் போச்சு என்று நினைத்தால்…அதுதான் இல்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள். 5 வினாடிகள் ஆக்சிஜன் இல்லை என்றால், உயிரினங்கள் அனைத்தும் சுவாசிக்க சிரமப்படும். அதையும் தாண்டி அனைத்து கான்கிரிட் கட்டடங்களும் நொறுங்கி விழுந்து விடுமாம். அணைகள், வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் ஆக்சிஜனால்தான் இறுகி கட்டடங்கள் நிலையாக நிற்கின்றனவாம். ஆக்சிஜன் இல்லையென்றால் கான்கிரிட் என்பது வெறும் தூசுதானாம். மேலும் கதிரவனில் இருந்து வரும் கதிர்கள் நம்மை சுட்டெரித்து உலகத்துக்கே ஆபத்தைத் தரும் என்கிறார்கள். ஓசோன் படலம் என்பது ஆக்சிஜன்தான். அதுதான் நம்மைப் புறஊதாக்கதிர்களிடமிருந்து நம்மைக் காக்கின்றது. ஆக்சிஜன் இல்லை என்றால் நமது உடலில் 21 சதவீதம் காற்றழுத்தம் இல்லாமல் நம் காதுகள் வெடித்துவிடுமாம். திடீரென்று கடலுக்கடியில் 2 கிலோமீட்டர் சென்றால் வரும் பாதிப்பு போன்றதாம் அது. ஆக்சிஜன் இல்லாம் நெருப்பு இல்லை. எதுவும் சூடாகாது. வாகனங்கள் இயங்க முடியாது. விமானங்கள் கீழே விழுந்துவிடும். ஆக்சிஜன் இல்லாமல எதுவும் எரியாததால்; உலகம் இருண்டு விடுமாம். பூமிக்கடியில் உள்ள மையப்பகுதி 45 சதவீதம் ஆக்சிஜனால் நிரம்பியுள்ளதால் அது இல்லாமல் போகும்போது பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்தும் உள்ளிழுக்கப்பட்டு நொறுங்கி நாம் வாழும் இவ்வுலகம் வெறுமையானதாகி விடும். அடேங்கப்பா….5 வினாடி ஆக்சிஜனால் இப்படி ஆகுமா என்று வியக்கத் தோன்றுகிறதல்லவா…அப்படியானால் இந்த உலகம் எந்த அளவுக்கு அதிசயங்கள் நிறைந்ததாக உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்த உலகம் மட்டுமல்ல, நமது வாழ்வும்தான். மிகவும் அதிசயமானது, தினசரி புதுமைகள் நிறைந்தது.

வாழ்க்கையை எந்தவித குறிக்கோளும் இல்லாமல் அலுவலகத்திற்கும், வீட்டுக்குமாக நகர்த்திக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்த வாழ்க்கை ரொம்ப போரடிக்கின்ற ஒன்றாக இருக்கும். வாழ்க்கை வாழப்பட வேண்டும் என்றால் நாம் ஏன் இங்கு இருக்கிறேன் என்ற கேள்வி நம்மில் அடிக்கடி எழ வேண்டும். அந்த கேள்வி நம்மை வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் நிறைவாக, பயனள்ள வகையில் நம்மை வாழ வைக்க வேண்டும்.  இல்லையென்றால் மன அழுத்தமும், சோகமும் நிறைந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும்.

இலக்கற்ற வாழ்வு ஆபத்தானது

வாழ்வில் நோக்கம் இல்லாதவர்கள் வளர்ச்சியடைகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஒரு விவசாயி சில நாட்கள் நெல்லையும், அடுத்த சில நாட்களில் அதைப் பிடுங்கிவிட்டு கோதுமை பயிரையும், அடுத்த சில நாட்களில் அது பலன் தரவில்லை என்று சோளம், கம்பு விதைத்தாரென்றால், இறுதியில் அவருக்கு எதுவும் மிஞ்சப் போவதில்லை என்று குறிக்கோளற்றவர்களைப் பற்றி பேராயர் புல்டன் ~Pன் சொல்லுவார்.

குறிக்கோளற்றவர்கள், கை நிறைய அம்புகளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியால் இருப்பவர்கள். அவர்கள் ஆபத்தானவர்கள். ஆம் ஆபத்தானவர்கள். அவர்கள் யாரை வேண்டுமானாலும் காயப்படுத்தலாம். பணமே குறிக்கோளாக வாழ்ந்தவர்களும் நிம்மதியாக வாழ்ந்ததாக வரலாறு இல்லை. முதுமலைக் காட்டுக்குள்ளே ஒரு கோடி ரூபாய் பணத்தோடு ஒரு புலியிடம் மாட்டிக்கொண்டால் பணமா நம்மைக் காப்பாற்றும்? என்னை என்ன தாசில்தார்னு நினைச்சியாடா என்று ஒரு கேள்விகேட்டு ஒரு அடியில் கொன்றுவிடும் என்று நெல்லை கண்ணன் நகைச்சுவையாகக் கூறுவார். குடும்ப வாழ்க்கையில் குறிக்கோளோடு வாழ்வது மிகவும் அவசியம். இலக்கு தெளிவு இல்லாதவனின் பயணம் பேருந்தில் எங்கு போகிறோம் என்று தெரியாமல் ஏறி உட்கார்ந்திருக்கும் மனநிலை பாதிக்கப்பட்டவர்போல்தான் இருக்கும்.

இயேசுவின் குறிக்கோள்

இயேசுவின் வாழ்வில் குறிக்கோள் இருந்தது. சிறுவயதிலேயே அதனை அவர் அவருடைய பெற்றோருக்கு வெளிப்படுத்தியிருந்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவரை எருசலேம் ஆலயத்தில் கண்டுபிடித்தபோது அவர் “என்னை ஏன் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்று தம் பெற்றோரிடம் தமது வாழ்க்கை எப்படிப்பட்டது என்று விவரித்தார். தமது இளமைப் பருவத்தில் பொது வாழ்க்கையில் போதிக்க ஆரம்பித்தபோது சொந்த ஊரிலேயே அதனை வெளிப்படுத்தினார். தொழுகைக்கூடத்தில் அவர் வாசித்தபோது..

ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது: ஏனெனில்

அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்.

ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்

சிறைப்பட்டோர் விடுதலை அடைவர்

பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும்

ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்

ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும்

அவர் என்னை அனுப்பியுள்ளார். லூக் 4:18-19


 என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளைத் தமதாக்கியிருந்தார்.

அன்பு, நீதி, உண்மை கொண்டு சுதந்திரத்துடன் இயங்கும் மனிதகுலமே இறையரசின் சாட்சிகள் என்று பரப்புரை செய்தார். இறையரசை நிறுவ சீடர்களைத் தேர்ந்தெடுத்தாh. ஒரு போராளியாக தம்மை தயாரித்துக்கொண்டார். பல ஊர்களுக்கும் பயணமானார். தாம் சந்தித்த ஒவ்வொருவரிடமும் இறையரசின் விழுமியங்களை எடுத்துக் காட்டினார். நோயற்றோருக்கல்ல, நோயுற்றோருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அவர் சொன்ன போது, சுற்றியிருந்த கூட்டம் இவரைக் கேலி செய்தது. 

யோவானின் சீடர்கள் மட்டும் நோன்பு இருக்க இவர் எந்நேரமும் உண்டு குடித்துத் திரிகிறாரே என்று பலரும் பலவாறு பேசியிருந்தார்கள்.

நானே வானினின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு…  எனது உடலையும் இரத்தத்தையும் உணவாகத் தருகிறேன் என்று முழங்கியபோது ஏதோ உளறுகிறார் என நினைத்து பலரும் அவரை விட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும் இயேசு தமது குறிக்கோளை நன்கு அறிந்திருந்தார்.

யூத சமூகத்தால் புறந்தள்ளப்பட்ட சமாரியர், வரி தண்டுபவர், பாவிகள், ஏழைகள், பெண்கள், விபச்சாரிகள், நோயுற்றோர் மற்றும் சுமை சுமந்து நொந்தவர்களைத்தான் அவர் தேற்றிக் கொண்டிருந்தார். “உங்கள் போதகர் ஏன் பாவிகளோடு உணவு உண்கிறார்? என்ற கேள்வியே அவரின் குறிக்கோளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அவர் தெளிவாக இருந்தார். சில நேரங்களில் அவர் யூதருக்கு மீட்பை அறிவிப்பதில் முன்னுரிமை தந்திருந்தாலும் (மத் 10:6, மத் 15:24) அவர் அனைவரும் மீட்பு பெற விரும்பினார். 

தமது குறிக்கோளை அடைய தடையாக இருந்த அத்துனை விடயங்களையும் அவர் அறிந்திருந்தார். யூதத்தலைவர்கள் அவரை எப்படி கொல்லலாம் என்று திட்டம் தீட்டியது அவருக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர் உயிரையே கொடுப்பதற்கு  தம்மையே தயாரித்துக்கொண்டிருந்தார். பல இடங்களில் தமது பாடுகளைப் பற்றியும், இறப்பைப் பற்றியும் உயிர்ப்பைப் பற்றியும் அவர் சமிக்ஞை கொடுத்திருந்தார் (மத் 16:21). எதிர்ப்புகளுக்கு அவர் அஞ்சியதில்லை. இறுதிவரை தமது குறிக்கோளை நிறைவேற்றுவதில் முனைப்பாக இருந்தார். இறுதியில் “எல்லாம் நிறைவேறிற்று, தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்” என்ற நிறைவோடு உயிர் துறந்தார். எப்படிப்பட்ட தெளிவான வாழ்வு இது…அவருடைய சீடர்கள் நாம். ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு தருவதும், இறையரசை நிறுவுவதும்தான் நமது பணியின் நோக்கம். என்ன செய்துகொண்டிருக்கிறோம்?

தொன்போஸ்கோவின் குறிக்கோள்

குருவான உடனேயே தொன்போஸ்கோவுக்கு பணம் தரும் சில வாய்ப்புகள் வந்தன. எத்தனையோ குருக்கள் அத்தகைய வாய்ப்புக்காகக் காத்துக்கிடந்தார்கள். ஆனால் எனது பணி கைவிடப்பட்ட இளையோருக்குத்தான் என்று உறுதியோடு இருந்து “ஆன்மாக்கள் போதும், வேறெதுவும் வேண்டாம்” என்ற குறிக்கோளோடு பணியாற்றினார். பல இடையூறுகள் வந்தபோதும் அவர் பின்வாங்கவில்லை. சாலையில் அவர் இளையோரோடு விளையாடிக்கொண்டிருந்ததைப் பார்த்து எத்தனையோ பேர் அவரை பழித்துரைத்தார்கள், பைத்தியக்காரன் என நினைத்து அவருக்கு சிகிச்சை அளிக்க குதிரைவண்டி ஏற்பாடு செய்தார்கள். இளையோர் பணி மிகவும் சவாலான பணி என்று தெரிந்ததால்தான் “உங்களுக்காகவே படிக்கிறேன், உங்களுக்காகவே உழைக்கிறேன், உங்களுக்காக வாழ்கிறேன்; உங்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று தெளிவாக இருந்தார். இறுதிவரை திக்கற்ற இளையோருக்கு கலங்கரைவிளக்கமாக ஒளிர்ந்தார்.

சவால்களை சமாளிப்போம்

தலைமைத் துறவி சாகும் நிலையில் இருந்தார். தமது முதல் சீடரைக் கூப்பிட்டு “இந்த மடாலயத்திற்கு அடுத்த தலைமைத்துறவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தூரத்தில் உள்ள மடாலயத்துக்குச் சென்று அங்கிருந்து நூறு சீடர்களை நான் கேட்டதாகப் பெற்று அழைத்து வா” என்று கட்டளையிட்டார். ஒரு தலைமைத் துறவிக்கு நூறு சீடர்கள் எதற்கு? என்று அவன் மண்டையை சொறிந்து கொண்டான். ஆனாலும் எதிர்த்து கேள்வி கேட்க முடியாதே… மடாலயத்துக்கு நடந்தான். கடுமையான பயணம்…மலைகள், பள்ளத்தாக்குகள், ஆபத்தான ஆறுகள், அடர்ந்த காடுகள் கடந்து பயணம் செய்யவேண்டியிருந்தது. கடுமையான விடாமுயற்சியோடு இலக்கை அடைந்தான். நூறு சீடர்களைப் பெற்றுக்கொண்டு வந்தான். வரும் வழியில் ஒரு நாட்டில் போட்டியொன்று நடத்தினார்கள். வெற்றி பெருபவர்க்கு தனது பெண்தான் பரிசு என்றதும் சீடர்களில் ஐம்பது பேர் காணாமல் போனார்கள். அடுத்த நாட்டில் மன்னர் தமது வாரிசுக்காக ஆள்தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு இன்னும் 25பேர் காலியாயினர். எஞ்சியிருந்தவர்கள், தங்களின் ஊர் வந்தபோதும், அழகான பெண்களைக் கண்டபோதும் கழன்று கொண்டனர். கடைசியில் அழைக்கப்போயிருந்த அந்த சீடன் மட்டுமே மிஞ்சினான். மரணப் படுக்கையில் இருந்த தலைமைத் துறவி “நீ மட்டும்தான் திரும்பி வருவாய் என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் நீ மட்டுமே ஒரு குறிக்கோளோடு இருந்தாய்…நீயே எனக்குப்பின் வழிநடத்து” என்று சொல்லி உயிர் துறந்தாராம். 

எல்லோரும் உயர்ந்த குறிக்கோளுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அதில் விடாப்பிடியாக வைராக்கியமாக இருப்பவர்கள் ஒரு சிலர்தான்…அவர்கள்தான் மாமனிதர்கள். 

ஸ்டீபன் வின்சென் பெனட் என்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

வாழ்வு இறப்பதானால் முடிந்து போவதில்லை

அது ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும்

பல்லாயிரக்கணக்கான வழிகளில் நாம் கவனமில்லாமல் செலவழிப்பதால்தான் அழிந்துபோகிறது.

வாழ்வில் உயர்ந்தவர் ஆக வேண்டும் என்று விரும்பிய மேக்ஸ்கந்தர் (ஆயஒ முயவெநச) சாதனையாளர்கள் மற்றும் வாழ்வில் முன்னேறிய நிலையில் இருந்த பலரையும் ஒர் ஆராய்ச்சி செய்தார். எந்த அடிப்படை குணம் பல உயர்ந்தவர்களை உருவாக்கியது என்று பார்த்தபோது அவர்கள் யாவருமே தங்களின் நண்பர்களைப் பெருக்குவதில் கவனம் செலுத்தியிருந்ததைக் கண்டார். தங்களின் முன்னேற்றத்தோடு தொடர்புடையவர்கள் அல்லது தொடர்பற்றவர்கள் என பலவகைப்பட்ட மனிதர்களிடமும் அறிமுகங்களை வளர்த்துக்கொண்டு தங்களின் குறிக்கோளை தெளிவாக அடைகிறார்கள். 

அன்றாடம் திட்டமிடுவோம்

காலை ஐந்து மணிக்கு எழுவது என்பது வெற்றியாளர்களின், மாமனிதர்களின் குணமாக இருக்கிறது. எந்தவித குறிக்கோளும் இல்லாதவர்களுக்கு ஏழு மணியும், ஒன்பது மணியும் ஒன்றே. சிறுசிறு சுயகட்டுப்பாடுகள்தான் நம்மைப் பற்றி நமக்கே உந்துசக்கியாக இருந்து வழிகாட்டும். தேடல் இருந்தால்தானே வாழ்வில் ருசி இருக்கும். அதற்கு நேர நிர்வாகம் அவசியம்.

நேரம் மிகவும் அரிதானது…ஆர்தர் பிராங்க் என்ற புகழ்பெற்ற திரைப்படைத் தயாரிப்பாளர் தனது பணிகளுக்காக அலுவலகம் செல்லும்போது அந்த பல மாடிக்கட்டிடத்தின் மின்தூக்கியைப் பயன்படுத்தாது படிக்கட்டிலேயே ஏறிச்செல்வாராம்.  காரணம் கேட்டதற்கு, “நான் தினமும் படிகளில் ஏறிச்செல்லும்போது எனது பணிகளுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான வலிமையைக் கடவுளிடம் கேட்பேன். பின்பு மாலை இறங்கும்போது, கிடைத்த நன்மைக்கு நன்றி சொல்லிக்கொண்டே திரும்புவேன். எனக்கு இந்த நேரம் செபிக்க உதவுகிறது” என்று கூறினாராம். வாழ்வின் குறிக்கோளைப் பற்றி தெளிவோடு இருப்பவர்கள் நேர்மறையாக தங்களின் செயல்பாடுகளைத் தொடங்குகிறார்கள். நிச்சயம் நடக்கும் என்ற ஆழமான நம்பிக்கையோடு பயணிக்கிறார்கள். பல இடர்வரினும் தொடர்ந்து பயணித்து இலக்கை அடைகிறார்கள். சுhதாரன மனிதர்கள் மாமனிதர்களாகின்றனர். குறிக்கோளை நோக்கி நடந்தால், நீயும் மாமனிதனே.


நான் ஏன் வாழவேண்டும் என்ற காரணம் அறிந்தவன் எப்படியும் வாழந்துவிடுவான். பிரடெரிக் நீட்சே