Tuesday, 29 September 2020

தீயில் கருகிய சீதை


இராமாயனம் எரிந்துகொண்டிருக்கிறது.

வானுயர சிலையில் அம்போடு நிற்கும் இராமன்

வால்மீகியைக் கொன்றவர்களைக் 

விசம்தடவிய அம்புகளால் வீழ்த்தியிருக்க வேண்டும்.

அம்போவென நிற்கிறான் ஆதித்யநாத் காலடியில்

அம்னெஸ்டியும் அகன்றுவிட்ட நிலையில்.


மாட்டுக்குப் புல்லறுத்த மனிசா வால்மீகி 

துப்பட்டாவால் இறுக்கப்பட்டபோது என்ன நினைத்தாளோ?

தரதரவென இழுத்துச்சென்றபோது என்ன செய்தாளோ?

ஆதிக்கசாதி ஆணவம் ஆண்குறியில் வழிந்தபோது

அண்ணே! வேணாம்னே என்று எப்படி அழுதாளோ?

நான்கு நாய்களின் வெறிபிடித்த பற்களில் சிக்கியவள் 

என்ன செய்திருக்க முடியும்?

எழுந்துவிடக்கூடாதென்று எலும்பை ஒடித்து

எதுவும் சொல்லக்கூடாதென நாக்கையும் அறுத்த

தேசபக்தர்களிடம் காவல்துறை வாலாட்டிக்கொண்டது.

தாரமாக்க தலைகவிழும் ‘தறு’தலைகள்

தலித் பெண்ணுடம்பில் வீரம் காட்ட மட்டும் 

தலை எழுதே எப்படி?

உலையில் தவழும் உன் தாயும் 

கல்லூரி பயிலும் தங்கையும் பத்திரம்தானே.

படிக்கத்தான் வழியில்லை

மாடு மேய்க்கவுமா?

ஏழைகளிடம் வீரம் காட்டும்

உன்னைப்போன்ற இழிபிறவி அவன் அல்லவே.

எதில் நீ உயர்ந்திருக்கிறாய் 

உச்சத்தில் உன்னை வைத்துக்கொள்ள?


கத்தி கொண்டு ‘ஜெய்ஸ்ரீராம்’ கத்திக்கொள்ளும்

ராமராஜ்யத்தில் சீதைகள் பாவம்.

இராவணபூமியில்தான் அவளுக்கு நிம்மதிபோலும்.


செய்தி: கடந்த வாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட19 வயது தலித் பெண்.