Thursday, 21 May 2020

உண்ட மயக்கத்தில் நான்…


மதிய வெயிலில் உயிர் குடிக்கும்

கருப்பு கங்குகளாக தகித்தது
டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை.
‘கவர்மென்ட் காப்பாற்றும்’ என்பது
எவருக்கும் இல்லை என இவருக்கும் தெரியும்தான்.
ஆனாலும் நப்பாசை.
செத்தாலும் ஊரில்போய் சாவோமே என
பாதி உயிர் போனதும் மீதி உயிரை இறுக்கிப் பிடித்து
ஊர் போய்க்கொண்டிருந்தார்.
“இந்த நாடு இன்னமுமா நம்மள நம்புது?”
வெடித்துச் சிரித்தார் வெண்தாடிச்சித்தர் 
குகையில் பதுங்கி பத்மாசனம் செய்தபடி.  

பசி… கொலைப்பசி.
கொரோனா நீங்க நாம் நோன்பிருக்கலாம்
பலநாள் பசியோடிருப்பவனுக்கு?
ஒறுத்தல் என்பதெல்லாம்
உணவு இருப்பவனுக்குத்தானே.
ஒன்றுமே இல்லாதவனுக்கு என்ன!
வெறுத்துப்போன வாழ்க்கையை
விட்டுவிட விரும்பாமல் விறுவிறுவென்று நடந்தார்.
நடுரோட்டில் ஏதோ கிடந்தது.
உணவு கிடைத்த வேகத்தில்
உள்ளே தள்ளினார்.
எதிரில் வந்தவருக்கு மட்டுமே தெரிந்தது
அது அடிபட்டுக்கிடந்த செத்த நாயென்று.

சாப்பாடா இது? மனுசன் சாப்பிடுவானா?
தூக்கி எறிந்த வார்த்தைகள்
துரத்திக்கொண்டிருக்கின்றன என்னை.
தொப்பையைக் குறைக்க ஓடுகிறேன் நான்.

செ. ஜெயன்.