Thursday, 17 December 2015

என்ன ..........க்கு போராடுறோம்?




கேட்கவே கேவலமாக இருக்கிறது
பீப் சாங்
கேட்க நாதியற்றுக் கிடக்கிறது 
தமிழகத்தின் அரசியல்.

சர்வ சாதாரனமாக அரை டஜன் கெட்ட வார்த்தை இருக்கும் 
இளையோர்களின் அன்றாட உரையாடல்கள்.
கெட்ட படங்கள் பார்க்காத ஆளில்லை.
கெட்ட பேச்சு கேட்காத நாளில்லை
குடித்துவிட்டு அம்மணமாய் கிடந்து
பிள்ளைகளுக்கு முன்னாலேயே
சரளமாக கெட்ட வார்த்தை பேசும் நாம்
ஒரு பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம்.

வரியாகக் கொடுத்த பணம் என்ன ஆனது?
வாழ்க்கை கொடுத்த வயல்கள் என்ன ஆயின?
வாய்க்கால்கள் கண்மாய்கள் ஏன் காணோம்?
ஆக்கிரமிப்பாளர்களை என்ன செய்தோம்?
செய்ய வேண்டிய அரசாங்கம்
கேட்பாரற்றுக் கிடக்கிறது.
இங்கே சிம்புவுக்கு எதிராக கோசமிட்டுக்கொண்டிருக்கிறோம்.
கெட்ட பாட்டு பாடிவிட்டாராம்.....

அவர்களின் அலட்சியத்தால் 
ஐநூறு பேரை இழந்திருக்கிறோம்
ஆடு மாடுகளை இழந்திருக்கிறோம்
பல்லாயிரம் கோடி நாசமாய்ப் போனது...
எவராவது அரசை எதிர்த்து போராடியிருப்போமா?
ஜட்டியில் படம் ஒட்டியவர் கைது – செய்தி
ஒட்டச் சொன்னவரும், இதுவரை ஒட்டியவர்களும்
ஏன் கைது இல்லை? மனம் கேட்டதா?
அனிருத்துக்கு எதிராக பொம்மை எரித்துக்கொண்டிருக்கிறோம்.
தமிழர்கள் முட்டாள்கள் என்பதை
மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டிருக்கிறோம்.

அழிவு அனைத்துக்கும் ஆதிகாரணமாகி
தண்ணீரில் கால் வைக்காமலேயே
உங்கள் துக்கம் எனது துக்கம் என்ற
'மக்களின் முதல்வரின்' கொச்சைப்படுத்தும் அறிக்கையைவிட
சிம்புவின் பாடல் எவ்வகையிலும் மோசமானது அல்ல.
என்ன  ..........க்கு போராடுறோம்?

Monday, 20 April 2015

சமத்துவமே மானிட மகத்துவம்



உலகத்தின் தலை மட்டும் 
கெக்கே பிக்கேவென சிரித்துக்கொண்டிருக்கிறது.
உடலைத் தாங்கும் கால்கள்தான் 
தடுமாறிக்கொண்டிருக்கின்றன.
முதல்தர நாடுகளின் முன்னேற்றம் 
மூன்றாம் தர நாடுகளில் 
ஏக்கத்தை மட்டும் விதைத்துக்கொண்டிருக்கிறது.
இயந்திரங்கள் இறக்குமதியாகுமளவுக்கு
இன்னும் உரிமைகள் இறங்கவில்லை.
இதனால்தான் சமத்துவம் 
எட்டாக்கனியாகவே தொங்குகிறது.
எட்டியிருந்தால் எப்போதோ சந்தோசமாகியிருப்பாள்
சராசரி இந்தியப்பெண்.

முக்காடு போட்டு அலையும் முஸ்லீம் பெண்களின்,
கண்களுக்கு மட்டும் வழிவிட்டு
திரையாய் தொங்கும் சிறையை விலக்க
கைவிலங்குகள் இன்னும் கழட்டப்படவில்லை.
ஆடவரின் பார்வையிலிருந்து பாதுகாப்பாம்.
அத்தனை பெண்களுக்கு அதிபதியாயிருந்தும்
அந்த ஆண்களின் நிலை அந்தோ பரிதாபம்.

ஆணாதிக்கத்தை ஆதாமிலேயே ஆரம்பித்துவிட்டு
ஏவாளே ஏமாற்றினாள் என
எதிர்பாலை குறை சொல்லியே
வளர்ந்துவிட்ட கிறித்தவத்தை விட்டு
கிறிஸ்து வெளியேற்றப்பட்டு
ஆண்டு இரண்டாயிரம் ஆகிவிட்டது.
ஏசுவை எறிந்துவிட்டபின்
எப்படி வரும் சமத்துவம்?

படுத்துறங்கும் பகவானின் பாதம் தொட்டு வணங்கி
பணிவோடு பணிவிடை புரியும் தேவிக்கு
வீணை மீட்டி நடனமாடி
நாயகனை சந்தோசப்படுத்தத் தெரியுமே தவிர
சமத்துவம் பற்றி சத்தியமாய்த் தெரிய வாய்ப்பில்லை.
கல்லானாலும் கணவன் என
கட்டிய தாலியை கண்களில் ஒற்றிக்கொண்டு
காலம் பூராவும் கஸ்டப்பட 
கற்புக்கரசிகள் தயாராக இருக்கும்வரை
சமத்துவம் - கலைந்திடும் மேகம்தான்.

இங்கு ஆணாதிக்க வேதங்களே 
மதங்களை ஆள்கின்றன.
மதங்களை மறுபரிசீலனை செய்ய
ஆண்டவன் அவதாரம் எடுத்தாலும்
இவன் விடப்போவதில்லை.

வள்ளுவன் அழைத்தவுடன் 
வாளியை விட்டாளாம் வாசுகி
வாளியும் அப்படியே நின்றதாம்.
கேட்பவன் கேனப்பயல் என்பது தெரிந்ததால்தானே
பொய் இன்னும் வடிந்துகொண்டிருக்கிறது.
எடுபிடிக்கும் ஏவல் செய்யவும்
எவ்வளவு அடித்தாலும் எதிர்த்துப்பேசாத
எழில்மிகு மங்கையருக்குத்தான் மவுசு அதிகம்.
குடும்பப்பெண்ணாம் குத்துவிளக்காம்.

எனக்கிருக்கும் உயிர், உடல், உணர்வு, உரிமை
இவளுக்கும் உண்டு, இவள் என் சரிபாதி என
யோசிக்கிறானோ அப்போதே சமத்துவம் பிறக்கும்.
தாம் அடிமைபடுத்தப்படுகிறோம் என்ற
விழிப்புணர்வின்றி இன்னும் 
உறக்க நிலையிலேயே உழன்று திரியும் மங்கையர்
என்னால் முடியும் என
மயக்கம் தெளிந்தால் மட்டுமே
மலரும் சமத்துவம்.

ஏனெனில் சமத்துவமே மானிட மகத்துவம்.