கோயில்கள் இறைவனின் நிழல் படிந்த இடங்கள். நிஜம் அங்கிருப்பதில்லை. இருக்கவும் முடியாது. இறைவனும் உருவமும் உயிரும் பிணமும் போல. ஒன்றிருந்தால் ஒன்றில்லை. நிஜமின்றிய நிழல் ஒரு முரண்தான் ஆனாலும் நிழலிலேயே நின்றுவிடுவது நியாயமுமில்லை. பிச்சை எடுப்பவர்களைக் கடந்து பிச்சை எடுக்கவே சந்நிதி நுழைவதால் நிஜம் பெரும்பாலும் விரும்பப்படுவதில்லை. அடையாளங்களைத் தாண்டி ஆண்டவனைத் தேடு. இங்குதான் எங்கோ இருக்கிறான்/ள். நிகழ்வுகளில், நபர்களில் உனக்குள்ளும் புறமும் எங்கும் இருக்கிறான்/ள். ஆனால் நிழல்களைத் தாண்டினால் மட்டுமே நிஜம் பரிச்சயம்.
கூட்டம் சுமாராக இருந்தது அந்த புறநகர் விரைவு வண்டியில். புத்தகம் படிப்பதும் புற அழகைப் பார்ப்பதுமாக எனது நேரம் சுருங்கிக்கொண்டிருந்தது. ஒரு தட்டு, இரு குச்சி, ஒரு அழுக்குப்பை அம்மாவும் அவளும் விரைந்து வந்த வண்டியிலும் விழாமல் நடந்து வந்தனர். பழக்கமாயிருக்கும். தரையில் அமர்ந்த அம்மா தட்டில் தாளம் தட்ட இரு இருக்கைக்கிடையே இருந்த சந்தில் பல்டி அடித்தாள், வளையத்தில் நுழைந்து வளைந்து நெளிந்து எழுந்தாள் அச்சிறுமி. அவளிடம் சோகமுமில்லை, புன்னகையுமில்லை. காரியத்திலே கண்ணாயிருந்தாள். ஐந்து நிமிடம் அப்படி இப்படி என ஆட்டம் காட்டிவிட்டு தட்டெடுத்து சில்லறைக்காய் நீட்ட அதுவரை இரசித்தவர்களுக்கு அவள் அந்நியமாகிப் போனாள். “பேரன்னப்பா?” எனது வினாவுக்கு விடையில்லை. ஏன் குழந்தைங்க பிச்சை எடுக்கனும்? விளையாட ஆசை இருக்காதா? உரிமையில்லையா? வாய்ப்புக் கிடைக்குமா? இல்லை இதுதான் விளையாட்டா? அறிவு ஆத்திரத்தோடு புலங்கியது. கொடுக்கவா வேண்டாமா என முடிவெடுப்பதற்குள் அடுத்த காட்சிக்கு அடுத்த பெட்டிக்குச் சென்றிருந்தாள்.
எப்படியெல்லாம் வாழ்ந்தோம் தெரியுமா? எப்போது கடைசியில் சிரித்தேனென்று ஞாபகமில்லை. இங்குதான் சாகவேண்டும் என ஆசை- ஆனால் படகேறி பக்கத்து நாட்டிற்குச் சென்று எப்படியும் வாழ்ந்து விடுவோமே என்றும் ஆசை. இருப்பதையெல்லாம் விற்றுவிட்டு வழி மறித்தவர்களிடம் வாரிக்கொடுத்துவிட்டு கள்ளத்தோணியில் காணாமல்போகவே உள்ளம் தயாராயிருந்தது. காற்றின் வேகம் குறையக் குறைய இதயத்தின் வேகம் அதிகமானது. எப்படியும் கரைசேர்த்திடு என கடவுளிடம் ஒற்றைக் கோரிக்கையே இருந்தது. இராணுவம் பிடித்துவிட்டால், புயலடித்தால், படகு கவிழ்ந்தால்? சும்மா இரு. எதுவும் நடக்காது. மனதின் ஆட்டம் படகின் அசைவைவிட வேகமாக ஆடியது. அகதிகளுக்கு நாட்டில் அனுமதில்லையாம் அரசு அதிகாரி சொல்லிவிட்டார். எத்தனையோ அகதிகளை ஆசுவாசமாய்த் தின்று ஏப்பம்விட்ட ஆழி எங்கள் படகுக்காக வாய் திறந்து காத்திருந்தது. கூட்டமாய்ப் பறந்த கடற்காகங்கள் போகிறபோக்கில் பொறாமை தெளித்துப் போயின. கடவுளே நாங்கள் கரையேற வழியே இல்லையா?