Friday, 25 July 2014

முட்புதரில் அன்று...



பார்த்தேன் இரசித்தேன்
பழகினேன் விரும்பினேன்
காதல் என்று நினைத்துக்கொண்டேன்.
கட்டாயப்படுத்தியாவது அவள் 
என்னைக் காதலிக்க வேண்டினேன்.
அவள் எனக்குறியவள் என முடிவெடுத்திருந்தேன்.
என்னைத் தவிர யாரும் அவளை
அண்டக்கூடாது என அடம்பிடித்தேன்.
ஆசைப்பட்டேன் மனைவியாக்க ஆசைப்பட்டேன்.
அவளுடைய எண்ணம், விருப்பு
எதுவும் நான் வினவியதில்லை.
அவள் எட்டியே நின்றாள்.
அவளின் கண்டுகொள்ளாமை
என் கல்லான இதயத்தைக் கருங்கல்லாக்கியது.
கத்தி, திராவகம், கல், கயிறு என எப்படி 
பழிவாங்கலாம் என நினைத்தேன்.
இதோ நினைத்ததை முடித்துவிட்டேன்.
என் உயிரையும் முடித்துக்கொண்டேன்.

நண்பா
கவர்ச்சியின் தூண்டலில் காமத்தின் தூண்டிலில்
கவனமாயிரு.
இல்லாவிட்டால் இருப்பு வெறுப்பாகும்
இழப்பு இரட்டிப்பாகும்.
சுதந்திரம் கொடுக்காதவன்
அதை அனுபவிக்க உரிமை இல்லை.

ஆசைகள் பேராசையாகி
தொல்லைகள் வெறியாகும்போது 
இடம் வலம் வரும் காதலர்களும்
ஆபத்தானவர்கள் என அறிவாய் தோழி.

Monday, 21 July 2014

இங்கு வரன் பார்க்கப்படும்



பொண்ணு அழகா இருக்கனும், அடக்கமா இருக்கனும்
நல்லா படிச்சுட்டு வீட்டுல வெட்டியா இருந்தாலும் பரவால
நாப்பது அம்பது பவுனு போட்டா போதும்.
வீட்டுல ஒத்த பொண்ணா இருந்தா ரொம்ப சந்தோசம்.

மாப்ள பி.இ படிச்சுருக்கனும்
நல்ல கம்பெனில கை நெறய சம்பளம் வாங்கனும்
பாரின் போக வாய்ப்பு இருந்தா முன்னுரிமை
சொத்துபத்தும் சொந்தவீடும் இருந்தா ரொம்ப சந்தோசம்.

பண்டமாற்று முறையில் மனிதப்
பிண்டங்கள் மாற்றிக்கொள்ளும் காலமிது.
காதலிச்சு கைபிடிக்கலாம்னாலும்
கௌரவக்கொலைத் தோரனையில் மொத்த குடும்பமும்.
குலசாமியிடம் பிரதான வேண்டுதலே
'காலாகாலத்துல கல்யாணம் நடக்கனும் சாமி'
கடவுளே கதிகலங்கிப் போய் நிக்கிறார்.
கருப்பான பொண்ணுகளுக்கும்
கஸ்டப்படும் பசங்களுக்கும்
என்ன பதில் சொல்லப்போறாரோ?

இந்தியர்களில் இதயம் இருக்குமிடம்
இன்னும் பத்திரமாகவே இருக்கிறது. அதனாலேயே
களவு போகக் காத்திருக்கும் இதயங்கள் 
காலாவதியாகிப்போகின்றன.