Monday, 10 December 2012

நிலத்தில் விழுந்த நீல(ள)ப்போர்வை


உச்சத்தில் சூரியன் நச்சரித்தாலும்
நன்றாகத்தான் இருந்தது.
உக்கிரப்படுத்துவது நம் மனம்தான்
இருந்த இடம் அப்படி.


மிரட்சியோடு வெறித்துப்பார்க்கும்
இடுப்புக்குழந்தைகள்
நிதானமின்றி நிர்வாணம் பெற்று
ஆடை துறந்த வாண்டுகளின் கைகளில்
கரைமணலில் கிணறுதோண்டி
ஒருசாண் ஆழத்தில் ஊற்றெடுத்த நீரால்
பூத்த புன்னகையில் மறைந்திருந்தது
சாதித்துவிட்ட சந்தோசம்.
அவிழ்ந்து விழும் அங்கவஸ்த்திரத்தை
இடது கையால் இழுத்துப்பிடித்து
அலையோடு மோத தயார்நிலையில் சிறுவர்.

எழுந்து வருகையில் விரைந்து விலகி
திரும்பி செல்கையில் வீரம் காட்டி
கால் மட்டும் நனைக்க எண்ணி
உடல் நனைத்த காந்தக்கன்னிகள்.

எட்டும் மட்டும் நீர் இருந்தும்
எட்டே நின்று நீர் அள்ளி
முகத்தைச்சுற்றி மூன்றுமுறை
சாத்திரம் சாற்றும் மங்கல மகளிர்.

இவனை இழுக்க வந்தவளை
இவன் இழுத்து விலகியதால்
 'சரி போ சனியனே'
நனைந்த சேலையை கசக்கிப்பிழிந்தபின்
கோபத்தில் கரையேரும் அதட்டல் அம்மா.

கலையுமின்றி எக்கவலையுமின்றி
கடற்கரை மணலில் மல்லாக்கப்படுத்து
காலாட்டி ஸ்டைல் காட்டும்
மேல்வர்க்க மைனர்குஞ்சு

கால்விரலால் மண்வெட்டுப்பதித்து
கிறுக்கலை மனதார சிலோகிக்கையில்
இருப்பவர் அழிக்க இறுக்கம் கொண்டு
எழுதிமுடிக்குமுன் எழுத்தையழித்த
அலையின் வலையில் பருவப்பெண்டிர்.

விரசமாகப்பேசும் காதலரிடம் 
விவகாரமாகப் பேசிய விவரமானவன்
கால்காசு சம்பாதித்துவிட்ட சந்தோசத்தில்
மீண்டும் கத்தினான் சுண்டல்..சூடா.. சுண்டல்.

எந்தக்கோயிலில் நேர்ச்சையோ,
வந்தவரெல்லாம் மகிழ்ந்திருக்க
காலடிபடாத கரையோரம்
அங்கபிரதட்சனம் செய்த அழுகிய தேங்காய் 

குளிக்கின்ற யாரையும் குழந்தையாக்கும்
இரண்டு காலம் மறக்கச்செய்யும்
இருக்கும் நேரம் இனிமையாக்கும்
பரந்த கடல் பரப்பிலே அமர்ந்து
விழிமுழுதும் வியப்போடு நிற்கிறேன்.

திரும்பி வர விரும்பாத இடம்
கல்லறை மட்டுமல்ல
கடற்கரையும்தான்