ஜெரிக்கோ பட்டணத்துப் பாதை
பாதையெங்கும் பெருங்கூட்டம்
கூட்டத்தின் நடுவில் இயேசு
இயேசுவைப் பார்க்கும் ஆர்வத்தில்
மரம் ஏறிக் காத்திருந்தான் கட்டையன் சக்கேயு
"இறங்கி வா, இன்று உன் வீட்டில் விருந்துன்பேன்."
பார்க்கவாவது முடியுமா என எண்ணியவருக்கு
பக்கத்தில் அமர்ந்து உண்ணப்போவதை நினைத்து
பரபரப்பானார்.
"இவன் தெய்வ மகனா, இல்லை _________ மகனா?
ஒதுக்கப்பட்டவன் வீட்டில் விருந்துண்ணுகிறானே"
முனுமுனுத்தன பரிசேயப் பிசாசுகள்
"யாருக்கு மருத்துவர் தேவை?
நல்லவனுக்காக அல்ல,
பாவிகளுக்காகத்தான் இந்த பரமன் வந்தான்"
தெளிவாக இருந்தார் இயேசு.
முனகியோர் மூக்குடைந்தனர்.
சக்கேயு சரி பணக்காரன்,
வரி வாங்குபவர்களின் தலைவன்.
பணமிருந்தும் பயனென்ன?
மதிப்பு தரத்தான் மனிதரில்லை, பாவம்.
பொருட்செல்வம் துறந்து - ஆண்டவனின்
அருட்செல்வம் பெற எண்ணி எழுந்தான்.
"சொத்தில் பாதியை ஏழைக்குக் கொடுப்பேன்
பொய் சொல்லிப் பறித்திருந்தால்
பன்மடங்காய் திருப்பித் தருவேன்"
மகிழ்வோடும் மன நிறைவோடும் வாக்களித்தான்.
"இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று
இவரும் ஆபிரகாமின் மகன்தானே..."
இழந்த அடையாளம் ஈட்டித்தருகிறார்
இறைமகன் இயேசு.
வரலாற்றுப் பக்கம் புரட்டிப்பார்
பிரிவினைக்குப் பிரம்மனைக் கூப்பிட்டு
அவன் தலையிலே உட்கார்ந்தான் சிலர்.
தோலுக்கும் வயிற்றுக்கும் இன்னும் சிலர்.
பாதத்திற்கு மட்டும் பலர். சேவை செய்யவாம்.
பரப்பப்பட்ட சில ஆண்டுகளிலேயே
பௌத்தம் தழுவியது யார்?
இஸ்லாம் இணைந்தது யார்?
இன்றும் கிறிஸ்தவம் நிரப்புவது யார்?
ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டபட்டவனுக்குத் தேவை
நீ கொட்டும் 'உச்சும்'
பிச்சைக்காசும் அல்ல.
மனிதனாய் மதித்திருந்தால்
மறுநொடியில் சமமாகும் மானுடம்.
அவனும் மனிதன்தானே.