உலகம் உருண்டு கொண்டே இருக்கிறது
இருந்த வரையில் இயற்கையாக இருந்தான்
அதனால் என்னவோ மனிதன்
தான் தோன்றிய நிலைக்கே
தான்தோன்றியாக போய்கொண்டிருக்கிறான்.
அப்போதும் அனைத்தும் இருந்தன
ஆனாலும் அறியவில்லை.
இயற்கையோடு இருந்தான்
இயல்பாக இருந்தான்.
கற்களின் நெருடலில் நெருப்பு பிறந்தது
மனித வாழ்வின் அதுவே முதல் விடியல்.
அன்று ஆடை இல்லை ஏனெனில் தேவை இல்லை
ஆடை வந்ததும் மானம் வந்தது.
இன்று ஆடை கொடுக்க பல ஆலைகள் இருந்தும்
ஆடை குறைப்பே அழகு என்றானது
இடிக்கு அஞ்சினான் இயற்கையிடம் கெஞ்சினான்,
பயமே பக்தியானது பக்தியே நெருக்கமானது
இயற்கையோடு இருந்தான்
இன்று நவீன யுகம்.
நிலா வரை சென்ற மனிதனுக்கு
அருகில் நிற்பவன் எதிரியாக தெரிகிறான்
கிரகங்கள் ஆராய்ச்சியின் மத்தியில்
கிரகமே சரியில்லை என நரபலியும் கொடுக்கிறான்
சமூகத்தில், கல்வியில், கலாச்சாரத்தில்,
பல விடியல்கள் கண்ட மனிதன்
இன்னும் சிந்தையின் விடியலுக்காக
அலைந்து கொண்டுதான் இருக்கிறான்
கிரேக்கத்தில் அன்று விடிந்தபின்னும் விளக்கெடுத்த "டயொஜெனுஸ்"
பைத்தியக்காரன் இல்லை.