கலைந்த கூந்தலோடு
கனலாக எரியும் கண்களோடு
வெண்ணாடைக்குள் ஒளிந்துகொண்டு
விண்ணக தேவதை மண்ணகம் வந்தாள்
மணிப்பூர் சென்றாள்.
இருப்பேனா இறப்பேனா என்ற பயமற்று
ஆன்மாவை ஆண்டவனிடம் கொடுத்துவிட்டு,
உடலை மட்டும் வைத்து
உலகையே உலுக்கி எடுக்கிறாள்.
இந்தியாவைக் காக்க வேண்டி
இன்னுயிர் தர வேண்டிய இராணுவம்
இவ்வளவு வக்கிரத்தோடும்
வன்முறையோடும்
இருப்பது கண்டு இவள் நோகிறாள்.
பறந்து திரியும் பட்டாம்பூச்சி போல
வாழத் துடிக்கும் வாலிபப் பருவத்திலேயே
வாளெடுக்க வழியற்று - பல
வருடங்களாய் வயிற்றை மட்டுமல்லாது
மனதையும் கறைபடாது
சவக்கிடங்கு போவதற்குள்
சாதிக்க வேண்டி சத்தியம் செய்து
சகாரா குழந்தை போல சத்தில்லாது
தினமும் செத்துக்கொண்டிருக்கிறாள்.
சீருடைக்காரர்கள் சிறைவைத்தாலும் - இந்த
சின்னப் பறவை நம்மை சிந்திக்க அழைக்கிறது.
இரோம் ஷர்மிலா
இன்னும் நீர் வாழ வேண்டும்
இவ்வளவு ஆண்டுப்போராட்டம் இனிதே முடிய
இன்னொரு காந்தி வர வேண்டும்.
மக்களின் குரலாய் மகேசன் உருவாய்
மண்ணில் தவழும் குழந்தையே - உம்
மனத்திடம் எம் மனதிடம் இருக்க வேண்டும்.